இந்தியா

சொகுசு ரெயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மதுராவுக்கு பயணம்- கிருஷ்ணன் கோவிலில் வழிபாடு
- உத்தரபிரதேசத்தின் மதுராவுக்கு செல்ல ரெயிலில் பயணம் மேற்கொண்டார்.
- மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் அமைப்பில், ஜனாதிபதி சூட், டீலக்ஸ் சூட்கள், உணவகங்கள், ஓய்வறைகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் இருக்கும்.
இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தால் மகாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு ரெயில் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகிறது. இது உலகின் மிக ஆடம்பரமான ரெயில்களில் ஒன்றாகும்.
இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மகாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு சிறப்பு ரெயிலில் பயணம் செய்தார். அவர் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தின் மதுராவுக்கு செல்ல இந்த ரெயிலில் பயணம் மேற்கொண்டார். ஜனாதிபதி மற்றும் அவரது ஊழியர்களுக்கான ஜனாதிபதி அறை, டீலக்ஸ் அறைகள், உணவகங்கள், ஓய்வறைகளைக் கொண்ட பெட்டிகள் சொகுசு ரெயிலில் உள்ளன.
இன்று காலை 8 மணிக்கு திரவுபதி முர்மு பயணம் செய்த மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயில் உத்தரபிரதேசத்தின் பிருந்தாவன் சாலை ரெயில் நிலையத்தை காலை 10 மணிக்கு சென்றடைந்தது.
பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீபாங்கே பிகாரி கோவில், நிதிவன்-குப்ஜ கிருஷ்ணா கோவில் ஆகியவற்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் மற்றும் பூஜை செய்தார். பின்னர் அவர் மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் வழிபடுகிறார். அதன்பின் மாலையில் அந்த சிறப்பு ரெயிலில் டெல்லிக்கு புறப்படுகிறார்.
இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் அமைப்பில், ஜனாதிபதி சூட், டீலக்ஸ் சூட்கள், உணவகங்கள், ஓய்வறைகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் இருக்கும். மூத்த ரெயில்வே ஊழியர்களுக்காக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. தடையற்ற சேவைகளை உறுதி செய்வதற்காக 2 என்ஜின்கள் இருக்கும். ஒரு என்ஜின் இயங்கும் அதே வேளையில், மற்றொரு என்ஜின் தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்ய உடன் பயணிக்கும் என்றார். ஜனாதிபதியின் இந்த பயணத்தை தொடர்ந்து ரெயில் நிலைய மேலாளர்கள், ரெயில்வே பாதுகாப்புப் படை மற்றும் பிற ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டன.
கடந்த 2023-ம் ஆண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு ரெயில் மூலம் ஒடிசாவின் புவனேஸ்வரில் இருந்து தனது சொந்த ஊரான ராய்ரங்பூருக்குப் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.