இந்தியா

பிரதமர், முதல் மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல்: மசோதாவை கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்
- பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
- தொடர் அமளியால் மக்களவை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டன. ஆனாலும் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே பாராளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மக்களவையில் மூன்று மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தாக்கல் செய்து பேசி வருகிறார். அவற்றில், அரசியலமைப்பு திருத்த மசோதாவும் அடங்கும். இதேபோன்று, யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025, ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2019 ஆகியவற்றை இன்று தாக்கல் செய்துதுள்ளார்.
இந்த ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2019 ஆனது, அதன் 54-வது பிரிவில் திருத்தம் கோருகிறது. இதன்படி, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள், அந்த நேரம் நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழ், அவர்கள் குற்றம் செய்திருக்கிறார்கள் என்ற தீவிர குற்றச்சாட்டுகளின்படி கைது செய்யப்பட்டாலோ அல்லது காவலில் வைக்கப்பட்டாலோ அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான சட்ட வடிவை வழங்குகிறது.
இதனால், கைது செய்யப்பட்ட 31-வது நாள் முதலமைச்சர் ஆனவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய கடிதம் அனுப்பலாம். காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், முதலமைச்சர் அல்லது அமைச்சர்களை லெப்டினன்ட் கவர்னர் பதவி நியமனம் செய்யும்போது, அதனை தடுக்க உட்பிரிவு எதுவும் இதில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள், பாராளுமன்றத்தின் கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமித்ஷா கூறினார்.
இதனால், இரு அவைகளின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர்களுடைய ஆலோசனைகளை வழங்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஆனாலும், அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த மசோதாக்களின் நகல்களைக் கிழித்து அமித்ஷாவை நோக்கி எறிந்தனர். தொடர் அமளியால் அவை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.