இந்தியா

யுடியூபர் ஜோதி பாகிஸ்தான் உளவாளி தான்.. சிக்கியது ஆதாரம் - 2,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!
- 2,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை இன்று காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்தது.
- பாகிஸ்தானுக்குச் சென்றபோது அங்குள்ள உளவுத்துறை நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.
'டிராவல் வித் ஜோ' என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா, இந்த ஆண்டு மே 16 அன்று அரியானா காவல்துறையினரால் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது தொலைபேசி டிஜிட்டல் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்த எஹ்சான்-உர்-ரஹீம் டேனிஷ் அலியுடன் ஜோதி பல முறை பேசியுள்ளது இதில் கண்டறியப்பட்டது. டேனிஷ் அதே மே மாதம் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
இந்நிலையில் அரியானாவின் ஹிசார் நீதிமன்றத்தில் சுமார் 2,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை இன்று காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்தது.
அவர் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக சிறப்பு விசாரணைக் குழு குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
ஜோதி நீண்ட காலமாக பாகிஸ்தான் முகவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இந்தியா குறித்த முக்கியமான தகவல்களை அவர்களுக்கு அனுப்பி வருவதாகவும் காவல்துறையினர் தங்கள் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளனர்.
குற்றப்பத்திரிகையின்படி, "ஆரம்பத்தில், அவர் ஒரு சாதாரண யூடியூபராக வலைப்பதிவுகள் மற்றும் வீடியோக்களை உருவாக்கினார்.
ஆனால் விசாரணையின் போது அவர் பாகிஸ்தானுக்குச் சென்றபோது அங்குள்ள உளவுத்துறை நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.
ஐஎஸ்ஐ முகவர்கள் என்று நம்பப்படும் ஷாகிர், ஹசன் அலி மற்றும் நசீர் தில்லான் ஆகியோருடனும் அவருக்கு தொடர்புகள் இருந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.