புதுச்சேரி

சாத்தனூர் அணை திறப்பு- தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
- விவசாய நிலங்களில் தேங்கி நிற்கும் நீர் வடிகால் வாய்க்கால் மூலம் ஆறுகள் வழியாக கடலில் கலக்கிறது.
- நீர்வரத்து அதிகரிப்பால் கொமந்தான் மேடு தரைபாலத்தில் தண்ணீர் வழிந்து ஓடுகிறது.
பாகூர்:
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கு வதற்கு முன்பாகவே கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது.
அதுபோல் விவசாய நிலங்களில் தேங்கி நிற்கும் நீர் வடிகால் வாய்க்கால் மூலம் ஆறுகள் வழியாக கடலில் கலக்கிறது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளான திருவண்ணா மலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து 3000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
அதன்படி தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பாகூர் வருவாய் துறை, மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், கரையோரம் அமைந்துள்ள புதுவை கிராமங்களான மணமேடு, சோரியாங் குப்பம், ஆராய்ச்சிக்குப்பம் கொமந்தான்மேடு ஆகிய கரையோர கிராமங்களுக்கு நேரில் சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் கொமந்தான் மேடு தரைபாலத்தில் தண்ணீர் வழிந்து ஓடுகிறது. அப்பகுதியில் தரைப்பாலம் சீரமைக்கும் பணி நடைபெறுவதால் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண் சாலையும் மூழ்கியது.
இதனால் அவ்வழியாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. அதேபோல் சித்தேரி அணைக்கட்டிலும் நீர்வரத்து அதிகரிப்பால் அந்த வழியும் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், விவசாயிகள் பல கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று வருகின்றனர்.