புதுச்சேரி

முதலமைச்சர் ரங்கசாமியுடன் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காட்சி.
புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
- ஊழியர்கள் கூட்டுப் போராட்டக் குழு மூலம் 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.
- தொழிற்சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை பி.ஆர்.டி.சி.யில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரியும், நிரந்தர ஊழியர்கள் 7-வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தியும் கடந்த 28-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் இன்று 12-வது நாளாக பஸ்கள் ஓடவில்லை. இதனால் புதுச்சேரியை சுற்றி உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே, ஊழியர்கள் கூட்டுப் போராட்டக் குழு மூலம் 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த நிர்வாகம் முன் வந்தது. இதனை எழுத்து பூர்வமாக உறுதிமொழியாக அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என, போராட்ட குழு தெரிவித்தனர்.
இந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என பி.ஆர்.டி.சி. நிர்வாகம் எச்சரித்தது.
இந்த நிலையில் புதுவை சட்டமன்றத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, நேரு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் தொழிற்சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களுக்கான சம்பளத்தை ரூ.10 ஆயிரம் உயர்த்துவதாகவும், நிரந்தர ஊழியர்களுக்கு அகவிலைப்படியை படிப்படியாக உயர்த்தி தருவதாகவும் உறுதி அளித்தார்.
இதனையடுத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இன்று மாலை முதல் பஸ்களை இயக்குவதாக கூறி முதலமைச்சர் ரங்கசாமியிடம் தெரிவித்து சென்றனர். முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தையில் பி.ஆர்.டி.சி மேலாண் இயக்குனர் சிவக்குமார் இருந்தார்.