புதுச்சேரி

விஜய்க்கு கூடும் கூட்டம் குறித்த கேள்விக்கு ஆர்.எஸ். பாரதி அளித்த பதில்
- திடீர் பிள்ளையார் கூப்பிடுகிறார் என்றால், ஒரு மணி நேரத்தில் கூட்டம் கூடும்.
- கூட்டத்தை வைத்து முடிவு எடுக்க வேண்டாம் என்றார்.
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு செய்தியாளர் விஜய் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு "76 வருஷம் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் பார்த்துவிட்டோம். விஜய் பற்றி எதுவும் கேட்காதீர்கள். இதை வெளிப்படையாக சொல்கிறேன்" என்றார்.
அவருக்கு கூட்டம் அதிக அளவில் கூடுகிறதே? எனக் கேள்வி எழுப்ப, "நாராயணசாமி நாயுடு என்பவர் 1980களில் இருந்தார். உங்களுக்கு ஞாபகம் இருக்கா?. தெரியுமா?. தெரியாதா.., அவர் விவசாய கட்சியை நடத்தினர். அவருக்கு மக்கள் அதிக அளவில் கூடினர். 1980 தேர்தலுக்கு முன்னாடி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். இந்திரா காந்தி சென்று பார்த்தார். கலைஞரும் சென்று பார்த்தார். மூன்று பேரும் ஆதரவு கேட்பதற்கான போனார்கள். அந்த கட்சி இப்போது இருக்கா? இப்படி பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். கூட்டத்தை வைத்து எட போட முடியாது.
40 வருடத்திற்கு முன்னதாக, எம்.ஜி.ஆர்.ஐ எதிர்த்து பழனிபாபா பேசி வந்தார். நான், பேராசிரியர் வெள்ளாளர் தெருவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினோம். அதன் அருகில் பழனிபாபா பேசினார். எங்கள் கூட்டத்திற்கு 100 பேர்தான் வந்திருந்தனர். அவரது கூட்டத்திற்கு 50 ஆயிரம் பேர் வந்தனர். அப்போது பேராசிரியர், இது கொள்கை கூட்டம். இது மாயை கூட்டம் என்றார். அந்த கூட்டம் என்னாச்சு?
திடீர் பிள்ளையார் கூப்பிடுகிறார் என்றால், ஒரு மணி நேரத்தில் கூட்டம் கூடும். கூட்டத்தை வைத்து முடிவு எடுக்க வேண்டாம் என்றார்.
விஜய்க்கு கூடும் கூட்டம் மாயை கூட்டம் என எடுத்துக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, அதை நீங்கள்தான் முடிவு செய்யனும் என பதில் அளித்தார்.