ஐ.பி.எல்.(IPL)

சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள், துக்கம் நிறைந்ததாக மாறியது - விராட் கோலி உருக்கம்!
- ஆர்.சி.பி. வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு RCB Cares தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி அந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஆர்.சி.பி. அணி, கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு மேலும், தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என RCB Cares அறிவித்துள்ளது.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு விராட் கோலி அஞ்சலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்.சி.பி. அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், "ஆர்சிபி அணி வரலாற்றில் சந்தோஷம் நிறைந்ததாக இருக்க வேண்டிய நாள், துக்கம் நிறைந்ததாக மாறியது. கொண்டாட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் நான் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்கள் கதையின் ஒரு அங்கமாகி விட்டது. அன்பு, அக்கறை, மரியாதையுடன் ஒன்றாக முன்னோக்கி செல்வோம்!" என்று கோலி தெரிவித்துள்ளார்.