கிரிக்கெட் (Cricket)

கான்வே, மிட்செல் அரை சதம்: நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்
- ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது.
- நியூசிலாந்தின் மேட் ஹென்றி 6 விக்கெட்டும், நாதன் சுமித் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
புலவாயோ:
ஜிம்பாப்வே சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 60.3 ஓவரில் 149 ரன்னில் சுருண்டது. கேப்டன் கிரேக் எர்வின் 39 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 6 விக்கெட்டும், நாதன் சுமித் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்திருந்தது. வில் யங் (41 ரன்), டிவான் கான்வே (51 ரன்) ஆகியோர் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. வில் யங் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹென்றி நிக்கோல்ஸ் 34 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கான்வே உடன் டேரில் மிட்செல் இணைந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தனர். கான்வே 88 ரன்னிலும், டேரில் மிட்செல் 80 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஜிம்பாப்வே சார்பில் முசரபானி 3 விக்கெட்டும், சிவாங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 158 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 31 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. ஜிம்பாப்வே அணி இன்னும் 127 ரன்கள் பின்தங்கி உள்ளது.