கிரிக்கெட் (Cricket)

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
- தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அந்த அணியின் வியான் முல்டர் சதமடித்து 147 ரன்னில் அவுட்டானார்.
புலவாயோ:
ஜிம்பாப்வே-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 90 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அறிமுகப் போட்டியில் சதமடித்த லுவான்- ட்ரே பிரிட்டோரியஸ் 153 ரன்னில் அவுட்டானார். கார்பின் போஸ்ச் சிறப்பாக ஆடி சதமடித்து, 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஜிம்பாப்வே சார்பில் சவாங்கா 4 விக்கெட்டும், முசபராபானி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சீன் வில்லியம்ஸ் சதமடித்து 137 ரன்னில் அவுட்டானார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர் 4 விக்கெட்டும், கோடி யூசுப், கேசவ் மகராஜ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
167 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வியான் முல்டர் 147 ரன்கள் குவித்தார்.
ஜிம்பாப்வே சார்பில் மசகாட்சா 4 விக்கெட்டும், சிவாங்கா, மசேகேசா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 536 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
மசகாட்சா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 57 ரன்கள் எடுத்தார். கிரெய்க் எர்வின் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை ஒரு ரன்னில் இழந்தார். அவர் 49 ரன்னில் அவுட்டானார். முசபராபானி 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 328 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதுடன், 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
ஆட்ட நாயகன் விருது அறிமுகப் போட்டியில் சதமடித்த லுவான்-ட்ரே பிரிட்டோரியசுக்கு அளிக்கப்பட்டது.