கிரிக்கெட் (Cricket)

புலவாயோ டெஸ்ட்: ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 418 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
- அறிமுக போட்டியில் சிறப்பாக ஆடிய பிரிட்டோரியஸ் சதமடித்து 153 ரன்னில் அவுட்டானார்.
புலவாயோ:
ஜிம்பாப்வே-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 90 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அறிமுகப் போட்டியில் பொறுப்பாக ஆடிய லுவான்- ட்ரே பிரிட்டோரியஸ் சதமடித்து அசத்தினார். அவர் 153 ரன்னில் அவுட்டானார்.
கார்பின் போஸ்ச் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஜிம்பாப்வே சார்பில் சவாங்கா 4 விக்கெட்டும், முசபராபானி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அந்த அணியின் சீன் வில்லியம்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 137 ரன்னில் வெளியேறினார். கேப்டன் கிரெய்க் எர்வின் 36 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து ஆடவில்லை.
இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர் 4 விக்கெட்டும், கோடி யூசுப், கேசவ் மகராஜ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
167 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சை ஆடியது.
இரண்டாம் நாள் இறுதியில் தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரை 216 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.