டென்னிஸ்

அமெரிக்க ஓபன்: பரிசுத் தொகையில் பாதியை இழக்கும் கார்லஸ் அல்காரஸ்..!
- இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு 44 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
- ஒட்டுமொத்தமாக 52.80 கோடி ரூபாய் அல்காரஸ்க்கு பரிசுத் தொகையாக கிடைத்தது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் கார்லஸ் அல்காரஸ்- ஜெனிக் சின்னர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அல்காரஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
கடந்த ஆண்டைவிட 39 சதவீதம் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டது. அதன்படி இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் 5 மில்லியன் டாலர் பரிசுத் தொகையாக கிடைத்தது. இந்திய பண மதிப்பில் சுமார் 44 கோடி ரூபாய் ஆகும். ஒட்டுமொத்தமாக 6.09 மில்லியன் டாலர் (52.80 கோடி ரூபாய்) பரிசுத் தொகை கிடைத்தது. ஆனால், மொத்த பரிசுத் தொகையையும் அல்காரஸால் சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல முடியாதாம்.
ஏனென்றால் அமெரிக்க சட்டப்படி 37 சதவீதம் வரி செலுத்த வேண்டுமாம். அதன்படி 1.7 மில்லியன் டாலர் வரியாக செலுத்த வேண்டும். அதுவும் இல்லாமல் 1.08 மில்லியன் முதல் 5 மில்லியன் வரையில் வருவாய் ஈட்டினால் நியூயார்ச் மாநிலத்திற்கு 9.65 சதவீதம் வரி செலுத்த வேண்டும். அப்படி பார்த்தால் சுமார் பாதி அளவு பணத்தை வரியாக மட்டுமே செலுத்த வேண்டுமாம்.
அதேவேளையில் அமெரிக்கா- ஸ்பெயின் நாட்டின் வரி ஒப்பந்தத்தின்படி ஒருமுறை வரி கட்டினால், அதன்பின் வரி கட்ட வேண்டாம். அதனால் சொந்த நாடு திரும்பும்போது மீண்டும் வரி கட்டத்தேவையில்லை.
சின்னருக்கு எதிராக அல்காரஸ் 15 முறை மோதியதில் 10 முறை வெற்றி பெற்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 4-2 என வெற்றிபெற்றுள்ளார். அதில் இரண்டு முறை அமெரிக்க ஓபனில் கிடைத்த வெற்றியாகும்.