டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜானிக் சின்னரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்
- இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றில் இருவரும் சந்திப்பது இது 3-வது முறையாகும்.
- ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரசுக்கு ரூ.43½ கோடி பரிசாக வழங்கப்பட்டது.
நியூயார்க்:
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று அரங்கேறியது. இதில் நடப்பு சாம்பியன் ஜானிக் சின்னர், கார்லஸ் அல்காரசுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜானிக் சின்னரை வீழ்த்தி, கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு ரூ.43½ கோடியும், 2-வது இடம் பெற்ற ஜானிக் சின்னருக்கு ரூ.21¾ கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றில் இருவரும் சந்திப்பது இது 3-வது முறையாகும். முந்தைய இரு மோதல்களில் ஜூன் மாதம் நடந்த பிரெஞ்சு ஓபனில் அல்காரசும், ஜூலை மாதம் நடந்த விம்பிள்டனில் ஜானிக் சின்னரும் வெற்றி பெற்றிருந்தனர். இதுவரை இருவரும் 14 முறை நேருக்கு நேர் மோதி இருந்தனர். இதில் அல்காரஸ் 9-5 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்தார்.
2004 முதல் 2008-ம் ஆண்டு வரை சுவிட்சர்லாந்து முன்னாள் ஜாம்பவான் ரோஜர் பெடரர் அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை தொடர்ச்சியாக வென்று இருந்தார். அதன் பிறகு யாரும் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை தக்கவைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.