தமிழ்நாடு செய்திகள்

நாமக்கல்லில் லிப்ட் சரிந்து மின்வயரில் மோதி விபத்து- 2 தொழிலாளர்கள் பலி
- திடீரென லிப்ட் சரிந்து அருகில் சென்று கொண்டு இருந்த மின்வயரில் மோதி நின்றது.
- நாமக்கல் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்தவர்கள் சிவக்குமார் (46), ஜோதி (45). பெயிண்டிங் தொழிலாளர்கள். இவர்கள் 2 பேரும் இன்று காலை நாமக்கல்-திருச்சி ரோடு நாகராஜபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
இதற்காக இவர்கள் 2 பேரும் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த லிப்ட் மீது நின்று பணியாற்றி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அந்த லிப்ட் சரிந்து அருகில் சென்று கொண்டு இருந்த மின்வயரில் மோதி நின்றது. இதில் லிப்டில் நின்று வேலைசெய்து கொண்டு இருந்த சிவக்குமார், ஜோதி ஆகிய 2 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
அவர்களின் சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்து மின்துறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும் நாமக்கல் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.