என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    கொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு- காரணம் என்ன?
    X

    கொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு- காரணம் என்ன?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மற்றொரு பரிசோதனை அறிக்கை நிலுவையில் உள்ளது.
    • திருப்புவனத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு சென்றபோது தனது நகைகள் திருட்டு போனதாக பேராசிரியை நிகிதா திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அக்கோவிலின் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமாரை, மானாமதுரை தனிப்படை போலீசார் அழைத்துச்சென்று தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே நிகிதா அளித்த நகை திருட்டு புகாரையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சில நாட்களுக்கு முன்பு நிகிதா அளித்த புகார் மற்றும் வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ. வசம் திருப்புவனம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டன.

    இந்த நிலையில் போலீசில் நிகிதா ஏற்கனவே அளித்த நகை திருட்டு புகார் தொடர்பாக சி.பி.ஐ. நேற்று புதிய வழக்குப்பதிவு செய்தது. அந்த புகாரில் என்னென்ன உள்ளது என சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-

    கடந்த ஜூன் 27-ந் தேதி காலையில் பேராசிரியை நிகிதாவும், அவருடைய தாயார் சிவகாமியும் காரில் மடப்புரம் கோவிலுக்குச் சென்றுள்ளனர். கோவில் காவல் பணியில் இருப்பவர்களுக்கான சீருடையைப் போல தோற்றமளிக்கும் வகையில் உடை அணிந்து வந்த அஜித்குமார் அவரை அணுகி உள்ளார்.

    நிகிதா தாயாரின் முதுமையை சாதகமாகப் பயன்படுத்தி, காரை நிறுத்த அஜித்குமாரே முன்வந்து சாவியை தன்னிடம் கொடுக்க வற்புறுத்தி வாங்கினார். பின்னர் கோவிலில் இருந்து வாகனத்திற்கு திரும்பிய பிறகு, தன் கைப்பை சிதைக்கப்பட்டு இருப்பதை நிகிதா பார்த்துள்ளார். சோதனை செய்தபோது, 6 பவுன் எடையுள்ள ஒரு சங்கிலி, 2½ பவுன் எடையுள்ள 2 தங்க வளையல்கள் மற்றும் ஒரு பவுன் எடையுள்ள கல் பதித்த 2 மோதிரங்கள் என மொத்தம் 9½ பவுன் தங்க நகைகள் காணாமல் போய் உள்ளன. அவற்றை கண்டுபிடித்து தர வேண்டும் என நிகிதா புகார் அளித்து உள்ளார்.

    இந்த புகார் தொடர்பான விசாரணைக்காக போலீசார் அதே நாளில் அஜித்குமாரை அழைத்துச் சென்றனர். மறுநாள் இரவில் அவர் அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டதாக போலீசாரால் அறிவிக்கப்பட்டது. ஜூன் 29 அன்று மாலை 5.45 மணி முதல் கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்த பிரேத பரிசோதனையில், அஜித்குமாரின் கால்கள், கைகள், மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் 44 வெளிப்புற காயங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றில் 19 காயங்கள் ஆழமானவை. தசை வரை நீண்டு இருந்தன. பிரேத பரிசோதனைக்கு சுமார் 12 முதல் 24 மணி நேரத்திற்கு முன்பு மரணம் நிகழ்ந்து இருக்கலாம் என்று மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் சிகிச்சை நிபுணர்களின் அறிக்கை கூறி உள்ளது. ஆனால் இறப்புக்கான சரியான காரணத்தை குறிப்பிடவில்லை. மற்றொரு பரிசோதனை அறிக்கை நிலுவையில் உள்ளது. திருப்புவனத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

    நிகிதாவிடம் இருந்து உண்மையிலேயே நகை திருட்டு போனதா? மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணமாகவே அஜித்குமாரை போலீசார் கடுமையாக தாக்கி கொன்றனரா? என இந்த வழக்கில் சந்தேகம் எழுப்பப்பட்டது. அதன் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரிலேயே சி.பி.ஐ. இந்த நகை திருட்டு வழக்கையும் விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×