என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    கடன் பிரச்சனை: 3 மகள்களை கழுத்தை அறுத்து கொன்று தந்தை தற்கொலை
    X

    கடன் பிரச்சனை: 3 மகள்களை கழுத்தை அறுத்து கொன்று தந்தை தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3 மகள்களை கொன்று விட்டு தந்தை கோவிந்தராஜ் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
    • வீடு கட்ட வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மகள்களை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா திம்மநாயக்கன்பட்டியை அடுத்த சிங்கிலியன் கோம்பை அருகே உள்ளது வேம்பாகவுண்டன்புதூர். இந்த பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40), ரிக் வண்டி தொழிலாளி. இவரது மனைவி பாரதி (25). இவர்களுக்கு பிரித்திகாஸ்ரீ (8), ரித்திகா ஸ்ரீ (6), தேவ ஸ்ரீ (5) ஆகிய 3 பெண் குழந்தைகளும், அனீஸ்வரன் (1½) என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

    கோவிந்தராஜ் கடந்த 8 மாதத்திற்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரிக் லாரி வாங்குவதற்காக ரூ.14 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது. ஆனால் அந்த பணத்தை வைத்து அவர் வீடு கட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தொழில் செய்ய முடியாமல் கோவிந்தராஜ் இருந்து வந்தார். மேலும் கடனை அடைக்க கேரள மாநிலத்திற்கு கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து தனியார் நிதி நிறுவனத்திற்கு 7 மாதங்களாக தலா ரூ.27 ஆயிரம் வீதம் மாதத் தவணையை செலுத்தி வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து கோவிந்தராஜ் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.

    இங்கு வேலை இல்லாமல் கோவிந்தராஜ் இருந்து வந்தார். இதனால் மாத தவணை செலுத்துவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று இரவு குழந்தைகள் மற்றும் மனைவி ஆகியோர் சாப்பிட்டு முடித்தவுடன் தூங்க சென்றனர். அப்போது படுக்கை அறையில் கோவிந்தராஜின் மனைவி பாரதி தனது 1½ வயது ஆண் குழந்தை அனீஸ்வரனுடன் தூங்க சென்றார். வீட்டின் ஹாலில் கோவிந்தராஜ் மற்றும் 3 மகள்களும் தூங்கினர். இன்று அதிகாலை 3 மணியளவில் எழுந்த கோவிந்தராஜ், மனைவி மற்றும் மகன் தூங்கி கொண்டிருந்த படுக்கை அறையின் கதவை வெளிப்புறமாக தாழ் போட்டார்.

    பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ஹாலில் தூங்கி கொண்டிருந்த மகள்கள் பிரித்திகா ஸ்ரீ, ரித்திகா ஸ்ரீ, தேவ ஸ்ரீ ஆகிய 3 பேரையும் கொடூரமாக வெட்டினார். தூக்கத்தில் இருந்த குழந்தைகள் திடீரென எழுந்து கதறி துடித்தனர். குழந்தைகள் அழும் சத்தம் கேட்டதும் படுக்கை அறையில் இருந்த பாரதி அலறியடித்துக் கொண்டு வெளியே வர முயன்றார். அப்போது வெளிப்புறமாக கதவு தாழிடப்பட்டு இருந்ததால் அவரால் வர முடியவில்லை.

    இந்த நேரத்தில் கோவிந்தராஜ் துடிக்க துடிக்க 3 குழந்தைகளையும் அரிவாளால் வெட்டினார். இதில் தலை துண்டிக்கப்பட்டு 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். பின்னர் கோவிந்தராஜ் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.

    பாரதியின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் இவர்களது வீட்டிற்கு ஓடி வந்தனர். அப்போது குழந்தைகள் 3 பேரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததையும், விஷம் குடித்த நிலையில் கோவிந்தராஜ் இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டின் படுக்கை அறையில் இருந்த பாரதி மற்றும் அவரது 1½ வயது மகனையும் அவர்கள் மீட்டனர். வீட்டின் படுக்கை அறையில் பாரதி தனது 1½ வயது மகனுடன் படுத்து தூங்கியதால் அவர்கள் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த கொடூர சம்பவம் குறித்து உடனடியாக மங்களபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் மங்களபுரம் போலீசார் விரைந்து வந்தனர்.

    மேலும் கொலை நடந்த வீட்டிற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் கொலை செய்யப்பட்ட 3 பெண் குழந்தைகள் மற்றும் தற்கொலை செய்து கொண்ட கோவிந்தராஜ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சனையில் கோவிந்தராஜ் 3 மகள்களையும் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×