தமிழ்நாடு செய்திகள்

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: காரின் மேற்கூறையில் ஏற முயன்று தவறி விழுந்த இளைஞர்
- இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு செல்வதற்காக ஆபத்தான முறையில் இளைஞர்கள் பயணம்
- ஓடும் காரின் உள்ளே இருந்துகொண்டு, காரின் மேற்கூறையில் இளைஞர் ஒருவர் ஏற முயன்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
இன்று காலை 8 மணி அளவில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபாராணி மற்றும் இமானுவேல் சேகரன் குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முருகேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு செல்வதற்காக பார்த்திபனூர் பகுதியில் ஆபத்தான முறையில் பேருந்து மற்றும் கார்களில் பயணித்த இளைஞர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் பார்த்திபனூர் அருகே ஓடும் காரின் உள்ளே இருந்துகொண்டு, காரின் மேற்கூறையில் ஏற முயன்ற இளைஞர் ஒருவர், தவறி சாலையில் விழுந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக, பின்னே வந்த வாகனம் உடனடியாக பிரேக் அடித்ததால், அந்த இளைஞர் நூலிழையில் உயிர்தப்பினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.