தமிழ்நாடு செய்திகள்

அண்ணா, எம்.ஜி.ஆர். பற்றி சர்ச்சை கருத்து: சீமானுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம்
- அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பற்றி பேசுவதை அவர் நிறுத்த வேண்டும்.
- இல்லை என்றால் இவரை விட கன்னா பின்னா என பேசி விட்டு சிரிப்பதற்கு எங்களுக்கும் தெரியும் என்றார்.
சென்னை:
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாளையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், சட்ட பேரவை தலைவராக சி.பா. ஆதித்தனார் சிறப்பாக பணியாற்றினார்.
அவர் அமர்ந்த நாற்காலியில் புரட்சித்தலைவி ஜெயலலிதா என்னை அமர வைத்தார் . இதனை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.
தினத்தந்தி பத்திரிகையை நிறுவி அதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் தமிழை பரப்பியவர் என்றார். பின்னர் அவரிடம் அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து அவர் கூறும் போது, மறைந்த தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர். பற்றி விமர்சனம் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. சிலருக்கு நாக்கில் சனி இருக்கும். சிலருக்கு ஜென்ம சனி இருக்கும். ஆனால் ஒட்டுமொத்த சனியின் மொத்த உருவமாக சீமான் இருக்கிறார்.
அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பற்றி பேசுவதை அவர் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் இவரை விட கன்னா பின்னா என பேசி விட்டு சிரிப்பதற்கு எங்களுக்கும் தெரியும் என்றார்.
அண்ணா, எம்.ஜி.ஆர்.பற்றி சீமான் தெரிவித்த கருத்து குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடமும் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் மறைந்த தலைவர்கள் பற்றி இது போன்று பேசுவது ஏற்புடையது அல்ல. கண்டிக்கத்தக்கது என்றார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான திருநாவுக்கரசர் கூறும்போது, கட்சித் தலைவர்களை சீமான் தரம் தாழ்ந்து விமர்சிப்பது அவருக்கு நல்லது அல்ல. அவரது கட்சிக்கும் நல்லது கிடையாது.
சீமான் தனது பேச்சையும் மாற்றிக்கொள்ள வேண்டும் அவரையும் மாற்றிக்கொள்ள வேண்டும். மறைந்த தலைவர்களை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.