தமிழ்நாடு செய்திகள்

நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி நிறுத்தம்- அமெரிக்காவில் ரூ.20 கோடி மதிப்பிலான முட்டை விற்பனை பாதிப்பு
- கடந்த 1-ந்தேதி முதல் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதித்தது.
- அமெரிக்காவில் ஒரு முட்டை ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் தினமும் சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இது தவிர அரபு நாடுகளுக்கு தினமும் 80 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு கடந்த ஜூன் மாதம் இறுதியில் முதன் முதலாக கப்பலில் 1.20 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதித்தது. இதையடுத்து நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. இதனால் 1.20 கோடி முட்டைகள் அனுப்ப முடியாத நிலை உருவாகி உள்ளது.
நாமக்கல்லில் இருந்து ஒரு முட்டையை ரூ.4.50க்கு கொள்முதல் செய்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல ஒரு முட்டைக்கு ரூ.7.50 செலவாகிறது. இதையடுத்து அமெரிக்காவில் ஒரு முட்டை ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல்லில் இருந்து முட்டைகள் அனுப்ப முடியாததால் அமெரிக்காவில் ரூ.20 கோடி மதிப்பிலான முட்டை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முட்டை ஏற்றுமதியாளர் சங்க தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், தினசரி நாமக்கல் மண்டலத்தில் இருந்து 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். இதில் ஒருமுறை மட்டும் அமெரிக்காவுக்கு அனுப்பிய 1 கோடியே 20 லட்சம் முட்டைகள் பெரிய விஷயமல்ல. இந்த முட்டைகளை இந்தியாவிலேயே வேறு பகுதியில் விற்பதற்கு நடவடிக்கை எடுப்போம். இதனால் முட்டைகள் பெரிய அளவில் தேக்கம் அடையாது.