தமிழ்நாடு செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடைமேடை டிக்கெட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்...
- சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இரவு நேரங்களில் பயணிகளை தவிர பொதுமக்களும் தூங்குவதற்காக வருகின்றனர்.
- இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றன.
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகளை வழியனுப்புவதற்காக உறவினர்கள்- நண்பர்கள் என ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள் நடைமேடை டிக்கெட் எடுத்து செல்கின்றனர். இவர்களால் கடைசி நேரத்தில் ரெயில் ஏற செல்லும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது.
இந்த நிலையில் நடைமேடை டிக்கெட்டுடன் நீண்ட நேரம் ரெயில் நிலையத்தில் காத்து இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மதுசூதன ரெட்டி கூறியதாவது:-
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரெயில்களும், விரைவு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இங்கு வருகை தருகின்றனர். அவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றன.
சமீபகாலமாக வட மாநிலங்களை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்டோரும், 60 வயதுக்கும் மேற்பட்டோரும் ரெயில்களில் சென்னைக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவர்கள் வீடுகளுக்கு தெரியாமல் வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டில் 162 வடமாநில குழந்தைகளும், இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 85 குழந்தைகளும் ரெயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இரவு நேரங்களில் பயணிகளை தவிர பொதுமக்களும் தூங்குவதற்காக வருகின்றனர். அரசு மருத்துவமனைக்கு வரும் பலர் ரெயில் நிலைய நடைமேடை அனுமதி டிக்கெட் எடுத்துக்கொண்டு விரைவு ரெயில் பகுதியில் தூங்குகின்றனர். இப்படி நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
ரெயில் நிலையத்தில் ரெயிலில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே தங்கிக் கொள்ள அனுமதி உண்டு.
எனவே நடைமேடை டிக்கெட் எடுத்து நீண்ட நேரம் ரெயில் நிலையத்தில் தங்குவது விதிகளை மீறுவதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.