தமிழ்நாடு செய்திகள்

பூதாகரமாக மாறிய தெரு நாய் பிரச்சனை: சிம்பிள் தீர்வு கூறிய கமல்
- ஒருத்தர் நல்லது செய்யும்போது எந்தக்கட்சி என்று நான் பார்த்ததில்லை.
- நாட்டுக்கு நல்லது நடக்குது என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியது தான்.
நாடு முழுவதும் தெரு நாய்கள் அதிகரித்து அதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மேலும் இது ஒரு சமூக பிரச்சனையாக உருவெடுத்து தெரு நாய்களுக்கு ஆதரவானர்கள், அவற்றை எதிர்க்கும் தரப்பினர் என இருதரப்பினர் தங்களது கருத்துகளை முன்வைத்து வாதிடுகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் விவாதம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தெருநாய்கள் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தீர்வு ரொம்ப சிம்பிள்-ங்க. விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்னன்னு தெரிந்தவர்கள், கழுதை எங்க காணோம் என்று எங்கேயாவது கவலைப்படுகிறார்களா?
கழுதைகள் எல்லாம் காணாமல் போய்டுச்சு? நமக்காக எவ்வளவு பொதி சுமைந்திருக்கு? இப்ப பார்க்கிறதே இல்லையே... கழுதைய காப்பத்தணும்னு யாராவது பேசுறாங்களா?. எல்லா உயிர்களையும் காப்பத்தணும்னு, எவ்வளவு முடியுமோ காப்பத்தணும். அவ்வளவுதான் என்னுடைய கருத்து என்றார்.
மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. அதை பா.ஜ.க. விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல்ஹாசன், ஒருத்தர் நல்லது செய்யும்போது எந்தக்கட்சி என்று நான் பார்த்ததில்லை. நாட்டுக்கு நல்லது நடக்குது என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியது தான். நாளைக்கு அவர்கள் நல்லது செய்தால் சொல்லத்தான் போகிறோம் என்றார்.