தமிழ்நாடு செய்திகள்

பாமக மகளிர் மாநாடு- வன்னியர் இடஒதுக்கீடு, பூரண மதுவிலக்கு உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்
- பாமக மாநாட்டில் ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார்.
- வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை காலந்தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் மகளிர் பெருவிழா மாநாடு பறை, தவில் இசையுடன் தொடங்கியது
இந்த மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பெண்களுக்கு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பூரண மதுவிலக்கு என பாமக மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. மாநாட்டில் ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார்.
பாமக மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.
*பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும்
* பெண்களின் பாலியல் வன்கொடுமை நாளும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மது குடியினால் குடும்பமே சீரழிகிறது. பெண்களும், குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்படுவதோடு பெண்கள் தற்கொலை உயிரிழப்பு அதிகரித்து வருவதால் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.
* தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் எங்கும் தடையின்றி விற்பதால் மாணவர்கள், இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் கஞ்சா விற்பனையை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி தடை செய்ய வேண்டும்.
* நீட் தேர்வுக்கு செல்லும் மாணவிகள் சோதனை என்ற பெயரால் மன வேதனைக்கு உள்ளாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
* பள்ளிகள்-கல்லூரிகள் பெண்கள் பணி புரியும் இடங்களில் பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதால் அதை தடுத்திட பெண் காவலர்கள் ஆங்காங்கே நியமிக்கப்பட வேண்டும்.
* 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் கிராமப்புற, நகர்ப்புற ஏழை - எளிய பெண்களின் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேலை நாட்களின் எண்ணிக்கையும் தின கூலியையும் அதிகப்படுத்த வேண்டும்.
* தமிழ்நாட்டின் பெண் கல்வி அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பெற கூடுதலாக மகளிர் பல்கலைக்கழகம் தனியாக உருவாக்கப்பட வேண்டும்.
* தமிழ்நாட்டில் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்து பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய் கொடுமைகள் அதிகரித்து வருவதால் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்.
* வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை காலந்தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் அதேபோல் அனைத்து சமுதாயத்திற்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
* தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை சரியாக நிர்ணயித்திட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்
* தமிழ்நாட்டின் காவிரி பாசன டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட வேண்டும்
* பூம்புகார் பகுதி மீனவர்கள் மற்றும் மீன்பிடி துறைமுக மீனவர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்