சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகாரில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு இன்று மாலை பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தலைமையில் நடக்கிறது.
பெண் உரிமையை காக்க, பெண்கள் முன்னேற்றம் காண, பெண்களுக்கு எதிரான வன்முறையை போக்கிட, அரசு பதவிகளில் பெண்கள் அதிகாரத்தில் அமர்ந்திட, மது, போதை பொருட்களால் ஏற்படும் சீரழிவில் இருந்து பாதுகாத்திட, சம உரிமை, சம அந்தஸ்து, சம வாய்ப்பு, சமபங்கு என அனைத்திலும் பெண்கள் முன்னேற்றம் காண பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் வன்னிய மகளிர் பெருவிழா மாநாடு இன்று மாலை 3 மணியளவில் நடக்கிறது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தலைமையில் நடக்கும் மாநாட்டில் சரஸ்வதி ராமதாஸ், மகள் காந்திமதி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்கள் ம.க.ஸ்டாலின், பாக்கம்.சக்திவேல், தஞ்சை மண்டல பா.ம.க. செயலாளர் ஐயப்பன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பா.ம.க. வன்னியர் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான மகளிர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அனைத்து ஜாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பிரதானமாக அமைய உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர்கள் என சுமார் 3 லட்சம் பேர் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பிரமாண்ட நுழைவாயிலுடன் கூடிய பந்தல் அமைக்கப்பட்டு, மேடை போடப்பட்டு, அனைத்து பணிகளும் நிறைவடைந்தது.
மாநாட்டில் பங்கேற்க வருபவர்களுக்காக பூம்புகார் எல்லைகளில் வழிகாட்டி பலகைகள், அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக மணி கிராமம், மேலையூர், பல்லவனேஸ்வரம், காவிரிப்பூம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தும் இடமும் அமைக்கப்பட்டு, அதற்கான முறையான வழிகாட்டி பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் மகளிர் தொண்டர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்கள் மாநாட்டில் பங்கேற்று மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்பும் வகையில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டில் பங்கேற்க வருபவர்கள் பூம்புகார் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டு, அதனை கடலோர காவல் குழும போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மாநாட்டிற்கு பங்கேற்பவர்களுக்கு உரிய குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டு பந்தலில் அனைவரும் அமரும் வகையில் விரிவான பந்தல் மற்றும் இருக்கைகள் அமைக்கப்பட்டு மாநாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் ஏராளமான எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு, மின்னொளியில் பந்தல்கள் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சு வசதிகள், சுகாதார குழுவினர்களும் அமைக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்ட போலீஸ் துறை சார்பில் 41 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் என ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) பொதுகுழு நடத்தப்பட்டு, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று டாக்டர்.ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.