தமிழ்நாடு செய்திகள்

திடீர் கூட்ட நெரிசலை சமாளிக்க தனியார் பஸ்கள் தயார்- கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது
- முக்கிய இடங்களுக்கு இந்த பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது.
- வார இறுதி நாட்கள், பவுர்ணமி நாட்கள், திருமண முகூர்த்த நாட்கள் போன்ற விசேஷங்களுக்கு தனியார் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறது.
சென்னை:
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிந்து இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய பண்டிகைகளும் அடுத்த வாரம் வருகிறது.
வார இறுதி நாள் மற்றும் தொடர் விடுமுறையின் காரணமாக வெளியூர் பயணம் அதிகரித்துள்ளது. அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன. சிறப்பு ரெயில்களிலும் இடமில்லை.
இந்த சூழ்நிலையில் அரசு பஸ்களில் பயணம் செய்ய மக்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள். சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.
இது தவிர தனியார் பஸ்களும் ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தனியார் பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகிறது.
திடீர் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தனியார் பஸ்கள் 11 மாத ஒப்பந்தத்தில் வாடகைக்கு அமைத்துள்ள னர். கடைசி நேர கூட்ட நெரிசலை சமாளிக்க இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
விழுப்புரம் மற்றும் சேலம் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தனியார் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சேலம் போக்குவரத்து கழகத்தின் சார்பில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பிற முக்கிய இடங்களுக்கு இந்த பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது.
விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் சார்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் போன்ற வழித்தடங்களில் தனியார் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் நாட்களில் பெரும் அளவில் பக்தர்கள் வருவதால் தனியார் பஸ்கள் பயன்படுத்தப்படுகிறது.
வார இறுதி நாட்கள், பவுர்ணமி நாட்கள், திருமண முகூர்த்த நாட்கள் போன்ற விசேஷங்களுக்கு தனியார் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறது. இந்த ஒப்பந்த காலத்தில் சுமார் 10 லட்சம் கிலோ மீட்டர் வரை பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்களை பராமரிக்கும் செலவு அவர்களை சார்ந்தது. கண்டக்டர் மட்டும் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து நியமிக்கப்பட்டு டிக்கெட் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களையொட்டி தனியார் பஸ்கள் தற்போது கூடுதலாக இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் சார்பில் தினமும் 100 தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதே போல சேலம் போக்குவரத்து கழகத்தில் இருந்து கோவை, சேலம், நாமக்கல், ஈரோட்டிற்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. தனியார் பஸ்கள் எந்தெந்த பகுதிகளுக்கு மக்கள் தேவை அதிகம் இருக்கிறதோ அந்த பகுதிகளுக்கு 30-ந் தேதி வரை இயக்கப்படும் என்றார்.