தமிழ்நாடு செய்திகள்

செல்லாக் காசுகளின் ஒற்றுமை கோஷத்தால் அ.தி.மு.க.வுக்கு எந்த பின்னடைவும் இல்லை- ஆர்.பி.உதயகுமார்
- எடப்பாடியார் செல்லும் இடங்களில் எல்லாம் நம்மை காக்க வந்த தெய்வம் என்று மக்கள் வரவேற்பதை கண்டு எதிரிகளும், துரோகிகளும் வயிற்று எரிச்சல் ஆகின்றனர்.
- பொறாமையால் எதிரிகளும், துரோகிகளும் வசை பாடி கொண்டிருப்பதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். மறைவிற்கு பின்பு அம்மா தனது அயராது உழைப்பால் இந்தியாவில் மூன்றாம் பெரிய இயக்கமாக அ.தி.மு.க.வை உருவாக்கினார். குறிப்பாக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இரட்டை இலையை நிற்க வைத்து மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து இந்த இயக்கத்தை வெல்ல எவருமில்லை என்ற வரலாற்றை நிரூபித்தார்.
இருபெரும் தலைவர்கள் மறைவுக்கு பின் தொண்டர்கள் கண்ட பொக்கிஷமாக, இருபெரும் தலைவர்கள் வடிவமாக, 8 கோடி மக்களின் நம்பிக்கையாக, எடப்பாடியார் இந்த இயக்கத்திற்கு பொக்கிஷமாக கிடைத்தார். மேலும் அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மீட்டெடுத்து, தமிழ்நாட்டை ஒரு குடும்பத்தில் சிக்காமல் மீட்க எழுச்சி பயணத்தை நடத்தி வருகிறார்.
ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியை ஒழித்து, மீண்டும் மக்களாட்சி மலர எளிய தொண்டராய், களப்போராளியாய் உரிமை போராட்டத்தை எடப்பாடியார் நடத்தி வருகிறார். சாமானிய மக்களுக்களின் உரிமை குரலாக, தன்மானத்தோடு களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார். இதுவரை 150 தொகுதிக்கு மேல் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு 65 லட்சம் மக்களை சந்தித்து புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
எடப்பாடியார் செல்லும் இடங்களில் எல்லாம் நம்மை காக்க வந்த தெய்வம் என்று மக்கள் வரவேற்பதை கண்டு எதிரிகளும், துரோகிகளும் வயிற்று எரிச்சல் ஆகின்றனர். பொறாமையால் எதிரிகளும், துரோகிகளும் வசை பாடி கொண்டிருப்பதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மக்கள் வெள்ளம் போல் திரண்டு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிரிகள், துரோகிகள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் பிரச்சனை, தொண்டர்களிடம் பிரச்சனை, நிர்வாகிகளிடம் பிரச்சனை, தலைமை இடத்தில் பிரச்சனை என்று வாய்க்கு வந்ததை கூறி அவர்களே இன்றைக்கு தமிழகத்தில் பிரச்சனையாக இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
இன்றைக்கு பொதுநலத்துடன், சேவை நோக்கத்துடன் எடப்பாடியார் திகழ்ந்து எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். இதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இருபெரும் தலைவர்களின் செல்வாக்கால் எதிரிகளிடம் சிம்ம சொப்பனமாக எடப்பாடியார் போராடிக் கொண்டிருக்கிறார். இதனால் இன்றைக்கு எதிரிகளுக்கு தூக்கம் தொலைந்து விட்டது.
தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியாக தூங்க, வளமான எதிர்காலத்தை உருவாக்க எடப்பாடியார் உழைத்துக் கொண்டிருக்கிறார். இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் இருபெரும் தலைவர்களால் விலாசத்தை பெற்றவர்கள் கூலிப்படையாக செயல்பட்டு அ.தி.மு.க.வின் விலாசத்தை சிதைத்து விடலாம் என்று பல்வேறு முயற்சிகள் எடுத்து தோற்றுத்தான் போனார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷத்தை இந்த செல்லாக் காசுகள் எடுத்து வைக்கும் சலசலப்பால் தொண்டர்கள் சொத்தான அ.தி.மு.க.விற்கு சேதாரத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள், அது ஒருபோதும் நடக்காது.
ஒவ்வொரு தொண்டர்களும் மன உறுதியுடன் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. தாய் இல்லாத பிள்ளையாக நாம் இருந்தபோது தாயாக நமக்கு கிடைத்தவர் தான் எடப்பாடியார். அவர் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். தொண்டருக்கு தொண்டராக எடப்பாடியார் நமக்கு கிடைத்துள்ளார். இதுதான் ஜனநாயகத்தின் அற்புதம், ஜனநாயகத்தின் வளர்ச்சி. இதை சர்வாதிகாரர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த சர்வாதிகாரர்கள் எடுக்கும் முடிவுக்கு சில கருங்காலிகள் துணை போகிறார்கள்.
அ.தி.மு.க.விற்கும், தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக எடப்பாடியார் உள்ளார். அவருக்கு பலவீனத்தை ஏற்படுத்த சலசலப்பை ஏற்படுத்தும் சில செல்லாக்காசுகளால் அ.தி.மு.க.வுக்கு எந்த பின்னடைவும் இல்லை. தொண்டர்கள் அனைவரும் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். சர்வாதிகாரிகளுக்கும் அவர்களுக்கு துணை போகும் கருங்காலிக்கும் தக்க பாடத்தை நாம் புகட்ட வேண்டும். தொண்டர்கள் நாம் எல்லோரும் மன உறுதியோடும், விசுவாசத்தோடும் எடப்பாடியாரிடம் இருக்க வேண்டும்.
சிலர் பதவி சுகம், அதிகாரத்தை பெற பேசுகிறார்கள். அவர்கள் முகத்திரையை கிழித்து எறியவேண்டும். மீண்டும் 2026 ஆண்டில் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலர அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் நாம் அனைவரும் சூளுரை ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.