தமிழ்நாடு செய்திகள்

விஜயினால் படம் தான் காட்ட முடியும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
- பெரியார் பேருந்து நிலையத்தில் காம்ப்ளக்ஸ் கட்டி 4 வருடமாகி விட்டது. அதனை திறக்க முடியவில்லை.
- ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள். அது முடியாது.
மதுரை:
மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள சொக்கநாதபுரம் காளியம்மன் கோவிலுக்கு ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
திறப்பு விழாவிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
நான் அமைச்சராக இருக்கும்போது மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்தேன். தி.மு.க. அமைச்சர்கள் டிபன் பாக்ஸ்களை கொடுத்து வருகிறார்கள். பத்திரபதிவுத்துறை அமைச்சரின் தொகுதிக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் திட்டங்களை எதுவும் கொண்டு வரவில்லை. ஆனாலும் எங்களது ஆட்சியிலே கொண்டு வந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
புதிதாக மண்டல தலைவர் யாராக இருந்தாலும் மக்கள் பணத்தை சூறையாடாமல் இருந்தால் சரி. முன்னால் இருந்தவர்கள் ரூ.250 கோடியை சுவாகா செய்து விட்டார்கள்.
பொற்கைப் பாண்டியன் வாழ்ந்த மதுரையில் மன்னராட்சி நடக்கிறது. ஒரு திருடனும் வரமாட்டான். குற்றம் செய்தவர்களே மாமன்றத்தை நடத்துவது சரியா?.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி அ.தி.மு.க. விஜயினால் படம் தான் காட்ட முடியும். புயல் மையம் கொண்டுள்ளது என சொல்வார்களே அதே போல எடப்பாடி பழனிசாமி சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் மையம் கொண்டுள்ளனர்.
பெரியார் பேருந்து நிலையத்தில் காம்ப்ளக்ஸ் கட்டி 4 வருடமாகி விட்டது. அதனை திறக்க முடியவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள். அது முடியாது.
கலைஞர் ஆட்சி அமைப்போம் என்று யாரும் சொல்வதில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சி தான் வேண்டும் என அ.தி.மு.க. பற்றிதான் பேசுகிறார்களே தவிர தி.மு.க. பற்றி பேசுவதில்லை. எடப்பாடியார் பொதுச்செயலாளராக இருக்கும் வரை தி.மு.க.வு க்கு வெற்றி எளிது என உதயநிதிக்கு எழுதிக் கொடுத்தவர்கள் தப்பாக எழுதி கொடுத்திருக்கிறார் என்றார்.