தமிழ்நாடு செய்திகள்

தங்கள் மீதான விமர்சனங்களுக்கு சினிமாக்காரர்களை வைத்து பதில் சொல்வது தி.மு.க.விற்கு புதிதல்ல- வானதி சீனிவாசன்
- வடமாநில பெண்கள் பற்றி தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியது கண்டனத்திற்குரியது.
- கல்விக்காக தி.மு.க. நடத்திய விழா ஒரு நாடகம் போன்று இருந்தது.
கோவை:
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி தமிழகத்திற்கு பெருமையும், சிறப்பும் சேர்த்து இருக்கிறார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 5-ந் தேதி கோவை வருகிறார். 4-ந் தேதி சென்னைக்கு வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு நடக்கிறது.
வடமாநில பெண்கள் பற்றி தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியது கண்டனத்திற்குரியது. டி.ஆர்.பி. ராஜா மட்டுமின்றி, தி.மு.க. மூத்த தலைவர்களும் வட இந்திய தொழிலாளர் பற்றி அவமரியாதையாக பேசி வருவது என்பது முதல் முறையல்ல.
வேத காலத்தில் இருந்து பெண்களுக்கு என்று சிறப்பான தனி இடம் இந்தியாவில் உள்ளது. இந்திய சுதந்திரம் மறுமலர்ச்சி ஆகியவற்றில் வட இந்திய பெண்களும் பங்களித்து உள்ளனர்.
வட இந்தியாவில் பெண்களில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை பின்தங்கி உள்ளது என்றால் காங்கிரஸ் கட்சியிடம் தான் கேள்வி எழுப்ப வேண்டும். ஏனென்றால் நீண்ட காலம் ஆட்சியில் இருந்து கல்வி ஆகியவற்றுக்கு அடித்தளம் இடுவதற்கு தவறியது காங்கிரஸ் கட்சி தான்.
கடந்த 11 வருடங்களாக அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் வங்கி கணக்கு, தொழில் துவங்குவதற்கு பெண்களுக்கான சிறப்பு திட்டம் என இந்திய பெண்கள் அடுத்த தளத்திற்கு வேகமாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கும் போது அரசியலுக்காக வடக்கு, தெற்கு என்று அவமானப்படுத்த வேண்டாம் என்பது எங்களுடைய கோரிக்கை ஆகும்.
கல்விக்காக தி.மு.க. நடத்திய விழா ஒரு நாடகம் போன்று இருந்தது. அவர்களுக்கு தேவைப்படக் கூடிய முக்கியமான நபர்களை அழைத்து கல்வியை பற்றி பேச வைத்துள்ளனர்.
பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறைகள் இல்லாமல், மரத்தடியில் பாடம் நடத்தும் நிலை தான் உள்ளது.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், ஜாதி ரீதியான மோதல்கள் இதையும் அவர்கள் சாதனையில் சேர்த்துக் கொள்வார்களா?. இதையெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காக துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்களை கூப்பிட்டு விளம்பரத்திற்காக நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்..
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், சிவகார்த்திகேயன் தி.மு.க. அரசை புகழ்ந்து பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறும்போது, தங்கள் மீதான விமர்சனங்களுக்கு இது போன்ற சினிமா பிரபலங்களை வைத்து பதில் சொல்வது தி.மு.க. அரசிற்கு புதிதல்ல. காலம் காலமாக அவர்கள் இதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்றார்.