தமிழ்நாடு செய்திகள்

சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை: தெற்கு ரெயில்வே திட்டம்
- 3 தினசரி ரெயில் சேவைகளும், 4 வாராந்திர ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
- வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இந்த பகுதியில் தனி சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை:
ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையேயான 53 கி.மீ ஒற்றை அகல ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், சென்னை- ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை அறிமுகப்படுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
சென்னை எழும்பூர் அல்லது தாம்பரத்தில் இருந்து புதிய பகல்நேர வந்தே பாரத் ரெயிலை இயக்குவதற்கான திட்டம் ரெயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் பகல் நேரத்தில் ரெயில் சேவைகள் இயக்கப்படவில்லை.
இரவு நேர சேவையாக சேது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், போட் மெயில் எக்ஸ்பிரஸ் உள்பட 3 தினசரி ரெயில் சேவைகளும், 4 வாராந்திர ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில்கள் விடப்பட்டால் தற்போது ஓடும் ரெயில்களில் நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே 53 கி.மீ. நீளமுள்ள முழு ரெயில் பாதையும் இப்போது மின்சார என்ஜினை இயக்கும் வகையில் மின் மயமாக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் உச்சிப்புளி ரெயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பருந்து கடற்படை விமான நிலையத்திற்கு அருகில் மேல்நிலை மின்கேபிள்கள் இல்லாமல் சுமார் 220 மீட்டர் இடைவெளி காணப்பட்டது.
எனவே வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இந்த பகுதியில் தனி சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
வந்தே பாரத் ரெயிலை இயக்குவதற்கான இறுதி பாதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதேநாளில் ராமேசுவரத்தில் இருந்து மீண்டும் சென்னைக்கு ரெயிலை இயக்குவதற்கு, வந்தே பாரத் ரெயில் சென்னையில் இருந்து 8 மணி நேரத்திற்குள் ராமேசுவரத்தை அடைய வேண்டும். எனவே வழித்தடத்தை இறுதி செய்வதற்கு முன்பு பயண நேரம் மற்றும் பாதையின் தன்மை ஆகியவை ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.