தமிழ்நாடு செய்திகள்

சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு- தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
- சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- 119 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 116.75 அடியாக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்வரத்து பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 119 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் தற்போது 116.75 அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும்என்று சாத்தனூர் உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் உள்ள புதுச்சேரி கிராமங்களான மணமேடு, குருவிநத்தம், பரிக்கல்பட்டு, சோரியங்குப்பம், கொமந்தான்மேடு, உச்சிமேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு புதுச்சேரி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை ஊழியர்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்று ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
கால்நடைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.