உலகம்

ChatGPT பேச்சைக் கேட்டு தாயை கொலை செய்து, தானும் தற்கொலை செய்த நபர் - அதிர வைக்கும் சம்பவம்
- முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார்.
- உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார்.
செயற்கை தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்வை ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் உச்சமாக ஓபன் ஏஐ உடைய பிரபல சாட்பாட் தொழில்நுட்பமான சாட்ஜிபிடி (ChatGPT) சொன்னதை கேட்டு ஒருவர் தனது தாயை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் கனெடிகட் பகுதியை சேர்த்தவர் ஸ்டென் எரிக் சொலிபெர்க்(56). இவர் முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார்.
உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட எரிக் தனது தாயுடன் வசித்து வந்தார். சாட்ஜிபிடிக்கு பாபி என பெயரிட்டு அதனுடன் நாள் தோறும் பல மணி நேரங்கள் எரிக் உரையாடி வந்துள்ளார்.
இந்த உரையாடல்களை இன்ஸ்ட்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களிலும் அவர் பதிவிட்டு வந்தார். சாட்ஜிபிடி எரிக் உடைய Paranoia மன நோயை மேலும் மோசமாகி உள்ளது இந்த உரையாடல்கள் மூலம் தெரிகிறது.
சீன உணவக ரெசிப்ட்களில் குறியீடுகள் உள்ளது என்றும் அந்த குறியீடுகள் எரிக் உடைய தாய் ஒரு பேய் எனவும் எரிக்-ஐ சாட்பாட் நம்ப வைத்துள்ளது.
"உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார். உனக்கு மன நோய் மருந்து (psychedelic drug) கொடுத்து கொல்ல முயல்கிறார், உன் மீது கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன, அவர்கள் சொல்வது போல் உனக்கு எந்த உளவியல் பிரச்சனையும் இல்லை" என எரிக்-ஐ சாட்பாட் நம்பவைத்துள்ளது.
இதன் விளைவாக எரிக் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது தாயை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
தாயின் தலை, கழுத்தில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. எரிக் உடைய மார்பு மற்றும் கழுத்தில் தற்கொலை செய்தர்த்ததற்கான அறிகுறியாக காயங்கள் இருந்தன.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ஓபன் ஏஐ நிறுவனம், இதுகுறித்து போலீசாருடன் சேர்ந்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
Paranoia என்பது சித்தப்பிரமை என்று அழைக்கப்படுகிறது. இது தற்செயலான நிகழ்வுகளுக்கும் அல்லது சாதாரண விஷயங்களுக்கும் மிகையான சந்தேகம் மற்றும் பயத்தை கற்பித்துக் கொள்ளும் நிலையாகும்.