உலகம்

ஈரானுடன் தூதரக உறவை துண்டித்த ஆஸ்திரேலியா
- ஆஸ்திரேலியாவில் உள்ள யூதர்களின் வழிபாட்டு தலங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
- இதனால் ஈரான் உடனான தூதரக உறவு துண்டிக்கப்பட்டு, இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கான்பெரா:
ஆஸ்திரேலியாவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல் சமீப காலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிட்னி மற்றும் மெல்போர்னில் உள்ள யூதர்களின் வழிபாட்டு தலங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
இதுகுறித்து ஈரான் புலனாய்வுத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் ஈரானிய புரட்சிகர காவல்படை அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியது உறுதியானது. இந்த அமைப்பை ஆஸ்திரேலியா ஏற்கனவே பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இஸ்ரேல்-காசா போருக்கு பிறகு இந்த தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தி இருப்பது தெரிய வந்தது.
இதனால் ஈரானுடனான உறவை துண்டிப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. எனவே நாட்டில் உள்ள ஈரான் தூதர் உடனடியாக வெளியேறுமாறு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்தார்.
அதேபோல், ஈரானில் உள்ள ஆஸ்திரேலிய தூதர்களும் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஒரு நாட்டின் தூதரை ஆஸ்திரேலியா வெளியேற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.
இதனையடுத்து இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே ஈரானில் உள்ள ஆஸ்திரேலியர்கள் எந்நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் ஈரான் பயணத்தை தவிர்க்குமாறும், ஏற்கனவே அங்கு வசிக்கும் ஆஸ்திரேலியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.