உலகம்

தொழில்கள் தொடங்க இந்தியாவுக்கு வாருங்கள்- பிரதமர் மோடி அழைப்பு
- ஜப்பானின் தொழில் மேம்பாடுகளை உலகம் முழுக்க கொண்டு செல்லும் சக்தியாக இந்தியா திகழ்கிறது.
- இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் எப்போதும் முக்கிய பங்கு தாரராக திகழ்ந்து வருகிறது.
டோக்கியோ:
இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே 15-வது உச்சி மாநாடு இன்று பிற்பகல் ஜப்பானில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
இன்று அதிகாலை அவரது விமானம் டோக்கியோ சென்று அடைந்தது. விமான நிலையத்தில் ஜப்பான் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் இந்தியவாழ் ஜப்பான் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
டோக்கியோ விமான நிலையத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அதை கண்டுகளித்த பிறகு பிரதமர் மோடி தனது 2 நாள் ஜப்பான் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
டோக்கியோவில் வந்து இறங்கினேன். இந்தியாவும், ஜப்பானும் தங்களது உறவுகளை வலுப்படுத்தி வரும் நிலையில் இந்தப் பயணத்தின்போது பிரதமர் இஷிபா மற்றும் பிற தலைவர்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை நான் எதிர் நோக்குகிறேன். மேலும் உறவை வலுப்படுத்தவும் இந்த பயணம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
இவ்வாறு அதில் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
விமான நிலைய வரவேற்புக்கு பிறகு பிரதமர் மோடி இந்திய ஜப்பான் தொழில் அதிபர்கள் பங்கேற்ற இந்தியா-ஜப்பான் கூட்டு பொருளாதார மன்ற கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்று இந்தியா அரசி லில் நிலைத்த தன்மையுடன் உள்ளது. பொருளாதாரத்தில் நிலையான தன்மையுடன் உள்ளது. கொள்கைகளில் வெளிப்படை தன்மை உருவாக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்ல உலகளவில் பொருளாதாரத்தில் மிகமிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்கிறது.
மிக விரைவில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறப் போகிறது. ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையான இளைஞர்களும் இணைந்து பணியாற்றும்போது இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும்.
ஜப்பானின் தொழில் மேம்பாடுகளை உலகம் முழுக்க கொண்டு செல்லும் சக்தியாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவும், ஜப்பானும் ஒருங்கிணைந்து எதிர்காலத்தில் நிலையான, வளர்ந்த, செல்வசெழிப்பு மிக்க ஆசிய நூற்றாண்டை வடிவமைக்கும்.
இந்தியாவும், ஜப்பானும் வெற்றிகரமாக ரோபாடிக்ஸ், செமி கண்டக்டர்ஸ், கப்பல் கட்டுதல் மற்றும் அணுசக்தி ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதன் மூலம் உலகம் முழுவதும் குறிப்பாக ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய வளர்ச்சிக்கு இந்தியாவும், ஜப்பானும் முக்கிய பங்காற்ற முடியும்.
இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் எப்போதும் முக்கிய பங்கு தாரராக திகழ்ந்து வருகிறது. மெட்ரோ ரெயிலில் இருந்து ஸ்டார்ட் அப் தொழில் வரை ஜப்பானின் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்து இருக்கின்றன. தொடர்ந்து இந்தியாவில் தொழில் முதலீடு செய்ய வருமாறு நான் அழைக்கிறேன்.
இந்தியாவில் தயார் செய்து உலகம் முழுக்க கொண்டு செல்ல உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தியாவின் பொருளாதாரம் அதற்கு ஏற்ப நிலையானதாக இருப்பதை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் நீங்கள் செய்யும் தொழில் முதலீடு சாதாரணமாக வளர்ச்சி அடைவது இல்லை. அந்த முதலீடு பல மடங்காக வளர்ச்சி அடையும் ஆற்றல் கொண்டது. எனவே அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அது மட்டுமல்ல உலகம் முழுக்க உள்ள பொருளாதார நட்பு நாடுகளில் இந்தியாவுக்கு தோழமை கொடுக்கும் முதல் நாடாக ஜப்பான் விளங்குகிறது. விண்வெளி ஆய்வு மற்றும் பாதுகாப்பு துறைகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்த துறைகளில் தனியார் துறை ஊக்குவிக்கப்படுகிறது.
இந்தியாவின் சிறப்பான பொருளாதார வளர்ச்சியை உலக நாடுகள் கண்காணிப்பதோடு மட்டுமின்றி நினைத்து பார்த்து எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்திக் கொண்டு இருக்கிறது.
இந்தியாவில் இளைஞர்கள் சக்தி அதிகம் உள்ளனர். அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது உங்களது கடமையாகும். எனவே இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு மீண்டும் அழைக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.