உலகம்

புதினை தடுக்கவில்லை என்றால் ஐரோப்பாவுக்கும் போர் விரிவடையும்.. ஐ.நாவில் உக்ரைன் அதிபர் எச்சரிக்கை
- ஜார்ஜியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை புதினின் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றும் வாய்ப்பை மேற்குலகம் ஏற்கனவே தவறவிட்டுவிட்டது.
- ஆயிரக்காணக்கான உக்ரைன் குழந்தைகளை ரஷியா கடத்திச் சென்றுள்ளது.
80வது ஐநா பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடந்து வருகிறது.
நேற்றைய கூட்டத்தில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "புதினை இப்போது தடுத்து நிறுத்தவில்லை என்றால், உக்ரைனின் எல்லைகளுக்கு அப்பால் ஐரோப்பாவுக்கும் போரை விரிவுபடுத்துவார்.
ரஷிய டிரோன்கள் மற்றும் ஜெட் விமானங்கள் நேட்டோ வான்வெளியில் அத்துமீறி நுழைகின்றன.
ரஷியாவை இப்போதே தடுத்துநிறுத்த ஐ. நா கட்டாயம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
நேச நாடுகள் ஒன்றிணைந்து உக்ரைனுக்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே ரஷியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து பிற நாடுகளைக் காப்பாற்ற முடியும்.
ஜார்ஜியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை புதினின் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றும் வாய்ப்பை மேற்குலகம் ஏற்கனவே தவறவிட்டுவிட்டது. அதேபோல ஐரோப்பிய நாடுகள் மோல்டோவாவையும் ரஷியாவிடம் இழந்துவிடக் கூடாது.
ஆயிரக்காணக்கான உக்ரைன் குழந்தைகளை ரஷியா கடத்திச் சென்றுள்ளது. அவர்களில் சிலரை மட்டுமே மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம்.
அவர்கள் அனைவரையும் மீட்க இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்? அவர்களை நாம் மீட்பதற்குள் தங்கள் குழந்தைப் பருவத்தை அவர்கள் கடந்துவிடுவர் போலத் தெரிகிறது.
தற்போது உலகின் ராணுவத் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் மனித வரலாற்றிலேயே மிக அழிவுகரமான ஆயுதப் போட்டியில் வாழ்கிறோம். "யார் பிழைக்கிறார்கள் என்பதை ஆயுதங்களே தீர்மானிக்கின்றன.
டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போன்ற ஆயுதங்கள், பாரம்பரியப் போர்களை விட அதிக ஆபத்தை உருவாக்குகின்றன.
ராணுவ ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்துவது குறித்து சர்வதேச விதிகள் தேவை.
சர்வதேச அமைப்புகள் உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்குவதில் மிகவும் பலவீனமாக செயல்படுகின்றன. நேட்டோவில் இருப்பது மட்டுமே பாதுகாப்பைக் கொடுக்காது.