உலகம்

ஹமாஸ் உடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மாற்று வழிகளை பரிசீலித்து வருகிறோம்: இஸ்ரேல்
- இஸ்ரேல்- காசா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- இந்த பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் குழுவினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250க்கும் அதிகமானோர் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக ஹமாஸ்க்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது கடுமையான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 20 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரண்டு முறை பணயக்கைதிகள் பரிமாற்றத்திற்காக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
தற்போது பொதுமக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். அவர்களுக்கு மனிதாபிமான உதவி பொருட்கள் கிடைக்கும் வகையிலும், மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்கும் வகையிலும் போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் ஹமாஸ் உடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று வழிகளை பரிசீலித்து வருகிறோம். என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தைக்கு அனுப்பிய பிரதிநிதிகளை திரும்ப அழைத்துள்ளது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவது உறுதியற்ற நிலையாகவே உள்ளது.