உலகம்

ஜப்பானில் வினோதம்: தேர்தல் தோல்வியால் AI-யை தலைவராக நியமிக்கும் அரசியல் கட்சி
- ஆளுநர் தேர்தலில் 2ஆம் பிடித்த நிலையில், மேல்சபை தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
- தோல்வி விரக்தியில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு டக் டக்கென பதில் கொடுத்து வருகிறது. தகவல் பெறுவதற்காகவே ஏ.ஐ. பயன்படுத்தி வந்த நிலையில், ஜப்பானை சேர்ந்த கட்சி ஏ.ஐ.-யை கட்சித் தலைவராக்க முடிவு செய்துள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்ததால், விரக்தியடைந்து அந்த கட்சியின் நிறுவனர் உடனடியாக வெளியேறிவிட்டார். இதனால் புதிய தலைவர் நியமிக்கப்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், செயற்கை தொழில்நுட்பத்தை (AI) கட்சியின் தலைவராக நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது.
The Path to Rebirth என் கட்சி கடந்த ஜனவரியில் ஷிஞ்ஜி இஷிமாரு என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு சிறு நகரின் முன்னாள் மேயர் ஆவார். அந்தக் கட்சி ஒருங்கிணைந்த கொள்கை தளத்தில் செயல்படுவதில்லை. மாறாக அதன் உறுப்பினர்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைத் தொடர அனுமதிக்கிறது.
2024 டோக்கியோ ஆளுநர் தேர்தலில், வலுவான ஆன்லைன் பிரசாரத்தின் மூலம் இரண்டாவது இடத்தைப் பிடித்தபோது, இஷிமாரு ஆரம்பத்தில் தேசிய கவனத்தை ஈர்த்தார். இருப்பினும், இந்த ஆண்டு மேல்சபை தேர்தலில் அவரின் கட்சி எந்த இடத்தையும் பிடிக்காத நிலையில், கட்சித் தலைவர் பதவியில் இருந்து வெளியேறினார்.
எப்படி செயல்படுத்தப்படும் என்பது உட்பட செயற்கை நுண்ணறிவு பற்றிய விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. உறுப்பினர்களின் அரசியல் நடவடிக்கைகளை AI கட்டுப்படுத்தாது. கட்சியின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் என அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.