உலகம்

பிரான்ஸில் மேக்ரான் அரசுக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்.. 250 பேர் கைது - 80,000 போலீஸ் குவிப்பு
- பாரிஸ் மற்றும் பிரான்சின் பிற பகுதிகளில் மக்கள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பிரதமராக செபாஸ்டின் லெகர்னுவை, அதிபர் மேக்ரான் நியமித்தார்.
பிரான்சில் அதிபர் மேக்ரானின் 'ரினைசன்ஸ்' கட்சி பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி தயவை நம்பி ஆட்சியில் உள்ளது. இதனால் கடந்த ஒன்பது மாதங்களில் நான்கு பிரதமர்கள் மாறியுள்ளனர்.
இதற்கிடையே பொது விடுமுறை நாட்களை குறைத்தல், ஓய்வூதியத் தொகையை உயர்த்தாதது, மருத்துவம், கல்வி, வீட்டு வசதி, மானியங்கள் போன்ற மக்களுக்கு அரசு வழங்கும் நலத் திட்டங்களுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய மசோதாவை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அண்மையில் பட்ஜெட் குறைப்பு மசோதாவை தாக்கல் செய்ய, பிரதமராக இருந்த பிராங்காய்ஸ் பாய்ரு முயற்சித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா நிறைவேறவில்லை. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பிராங்காய்ஸ் பாய்ரு கோரினார். அதில் தோல்வியடைந்ததால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே கடந்த திங்களன்று புதிய பிரதமராக செபாஸ்டின் லெகர்னுவை, அதிபர் மேக்ரான் நியமித்தார். இவ்வாறு பிரதமர்கள் தொடந்து மாறுவதும் பட்ஜெட் குறைப்பும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், நேற்று பாரிஸ் மற்றும் பிரான்சின் பிற பகுதிகளில் மக்கள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து, வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். மேலும் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுதும் 80,000 போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே பட்ஜெட் குறைப்புக்கு எதிராக வரும் 18ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும், வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.