ஜகார்த்தா:
தென்கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்று இந்தோனேசியா. இங்கு சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ஆனால் எம்.பி.க்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது.
இது அந்த நாட்டு மக்களின் சராசரி வருமானமான ரூ.17 ஆயிரத்தை விட பல மடங்கு அதிகம் ஆகும். எனவே எம்.பி.க்களின் சம்பளத்தை குறைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அப்போது தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள பாராளுமன்றத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். எனவே போராட்டத்தைக் கலைக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதன்பின் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டத்தைக் கலைக்க முயன்றனர். போராட்டக்காரர்களுக்கு இடையே போலீஸ் கவச வாகனம் தறிகெட்டு ஓடியது. இதில் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பாண்டுங், யோககர்த்தா, மக்காசர் ஆகிய நகரங்களுக்கும் போராட்டம் பரவியது.
அதன் ஒரு பகுதியாக மக்காசரில் உள்ள நகர்மன்ற அலுவலகம், போலீஸ் தலைமையகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அந்தக் கட்டிடம் கொழுந்து விட்டு எரிந்தது.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் 3 அரசு ஊழியர்கள் உடல் கருகி பலியாகினர். 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.