கிரிக்கெட் (Cricket)

அபிஷேக் சர்மா அதிரடி: வங்கதேசம் வெற்றிபெற 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
- டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
- அதன்படி முதலில் ஆடிய இந்தியா 168 ரன்களை எடுத்தது.
துபாய்:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், துபாயில் நடைபெறும் சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பவுலிங் தேர்வு செய்தள்ளது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் இறங்கினர்.
முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி அடுத்து அதிரடியில் இறங்கியது. பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் குவித்தது.
முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 29 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா அரை சதம் கடந்தார். அவர் 37 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஷிவம் துபே 2 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 5 ரன்னும், திலக் வர்மா 5 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய பாண்ட்யா 38 ரன்னும், அக்சர் படேல் 10 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்குகிறது.