கிரிக்கெட் (Cricket)

டி20 கிரிக்கெட்: விராட் கோலி சாதனையை முறியடித்த டிவால்ட் பிரெவிஸ்
- டிவால்ட் பிரெவிஸ் 3 போட்டிகளில் 14 சிக்சர்களை விளாசியுள்ளார்.
- இந்த தொடரில் டிவால்ட் பிரெவிஸ் 14 சிக்ஸ், 13 பவுண்டரி உள்பட 180 ரன் குவித்தார்.
மெல்போர்ன்:
தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.
இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 172 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய டிவால்ட் பிரெவிஸ் 26 பந்தில் 6 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 53 ரன்களை விளாசினார்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கிளென் மேக்ஸ்வெல் பொறுப்புடன் ஆடி 36 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ரன்களை விளாசினார்.
இந்நிலையில், இந்த தொடரில் தென் ஆப்பிரிக்காவின் டிவால்ட் பிரெவிஸ் ஆட்டம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
இந்தப் போட்டியில் 6 சிக்சர்களை விளாசியதன் மூலமாக விராட் கோலியின் சாதனையை டிவால்ட் பிரெவிஸ் முறியடித்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பெருமையை டிவால்ட் பிரெவிஸ் பெற்றுள்ளார்.
விராட் கோலி 10 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 12 சிக்சர்களை விளாசியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை டிவால்ட் பிரெவிஸ் வெறும் 3 போட்டிகளில் 14 சிக்சர்களை விளாசி முறியடித்துள்ளார்.
மேலும், இந்த டி20 தொடரில் 3 போட்டிகளில் ஆடிய டிவால்ட் பிரெவிஸ் 14 சிக்சர், 13 பவுண்டரி உள்பட 180 ரன்களை குவித்துள்ளார்.