கிரிக்கெட் (Cricket)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி நாளை தேர்வு
- முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் அக்டோபர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடக்கிறது.
- இரண்டாவது டெஸ்ட் அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசியக் கோப்பை யில் விளையாடி வருகிறது. இதன்பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் அக்டோபர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடக்கிறது. 2-வது டெஸ்ட் அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பயிற்சியாளர் கவுதம் கம்பீர், டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் துபாயில் இருப்பதால் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. 15 பேர் கொண்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் இந்த தொடரில் ஆடமாட்டார். இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் அவருக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது. அவர் முழு உடல் தகுதியுடன் இல்லை. அவர் இடத்தில் துருவ் ஜூரல் இடம்பெறுவார்.
கருண் நாயர், நிதிஷ்குமார் ரெட்டி, படிக்கல் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவலாம். இதில் கருண் நாயர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. முதல் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா தேர்வாகலாம்.
4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க விரும்பினால் ஜடேஜா, குல்தீப், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் இடம் பெறலாம். வேகப்பந்து வீச்சாளராக முகமது சிராஜ் மட்டும் தேர்வாகலாம். மாற்று வீரராக ஜெகதீசன் தேர்வு செய்யப்படலாம்.