கிரிக்கெட் (Cricket)

பி.சி.சி.ஐ. தலைவர் பதவியா?: சச்சின் தெண்டுல்கர் விளக்கம்
- துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
- புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக ரோஜர் பின்னி கடந்த இரு ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவருக்கு சமீபத்தில் 70 வயது நிறைவடைந்தது.
பி.சி.சி.ஐ. விதிகளின்படி 70 வயது கடந்தவர்கள் நிர்வாகப் பதவிகளில் நீடிக்க முடியாது என்பதால் ரோஜர் பின்னி தனது பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
இதற்கிடையே, பி.சி.சி.ஐ. புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் எஸ்.ஆர்.டி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேன்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பி.சி.சி.ஐ தலைவர் பதவிக்கு சச்சின் தெண்டுல்கர் பரிசீலிக்கப்படுவதாகவோ அல்லது பரிந்துரைக்கப்படுவதாகவோ சில தகவல்கள், வதந்திகள் பரவி வருவதாக எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம். ஆதாரமற்ற ஊகங்களுக்கு நம்பகத்தன்மை அளிப்பதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.