கிரிக்கெட் (Cricket)

15 ஓவரிலேயே சேனலை மாத்திட்டேன்: இந்தியா, பாகிஸ்தான் போட்டி குறித்து கங்குலி
- இந்தியா முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சையும், 2வது போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியது.
- ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றது.
புதுடெல்லி:
ஆசியக் கோப்பை தொடரில் சூரியகுமார் தலைமையிலான இந்தியா முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
முதல் போட்டியிலேயே ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்திய இந்தியா, 2வது போட்டியில் பாகிஸ்தனையும் வீழ்த்தியது. குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ள இந்தியா ரன்ரேட் அடிப்படையில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இதற்கிடையே, போட்டி முடிந்ததும் இந்திய அணி வீரர்கள் கை குலுக்காமல் சென்றது குறித்து பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் போட்டி குறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது:
இந்திய அணியை அனைத்து நாட்களிலும் வீழ்த்தும் தரம் எந்த ஆசிய அணியிடமும் இல்லை. பாகிஸ்தான் நமக்கு பொருத்தமாக இல்லை என்பதை மரியாதையுடன் சொல்வேன். ஏனெனில் அந்த அணியில் தரம் தடுமாறுவதை என்னால் பார்க்க முடிகிறது.
இந்திய அணி நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாமல் விளையாடுகிறது. இந்திய அணி கிரிக்கெட்டில் வெகுதூரம் முன்னோக்கி இருக்கிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற ஆசிய அணிகள் ஓரிரு நாட்களில் நம்மை தோற்கடிப்பார்கள். மற்றபடி பெரும்பாலான நாளில் நாம் சிறந்த அணியாக இருக்கிறோம்.
நான் 15 ஓவருக்கு பின் போட்டியைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக மான்செஸ்டர் சிட்டி விளையாடிய கால்பந்து போட்டியை பார்த்தேன். ஏனெனில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே எந்தப் போட்டியும் இல்லை. கடந்த 5 ஆண்டாக இந்தியா–பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்பார்ப்பு கொடுக்கிறோம். அது உடனடியாக உடைந்து ஒருதலைபட்சமாக முடிகிறது என தெரிவித்தார்.