ஆஸ்திரேலியாவில் ராஜமரியாதை: பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் அமர்ந்த தேவா
- ஆஸ்திரேலியா பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் அமர்ந்தார் தேவா.
- ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி என்றார்.
சிட்னி:
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவர்.
தனித்துவ குரல் வளத்தால் கவர்ந்தவருமான இசையமைப்பாளர் தேவாவின் இசை பயணத்தை ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம் பாராட்டி கவுரவித்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தேவாவுக்கு மரியாதை தரப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமரவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, மதிப்பிற்குரிய செங்கோலும் வழங்கப்பட்டது.
இதனால் தேவா நெகிழ்ந்து போனார். இதுதொடர்பாக தேவா கூறியதாவது:
ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை பெருமை அளிக்கிறது.
எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கவுரவத்தை வழங்கியதற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி.
இந்தத் தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாசாரத்தைப் பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம்.
எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான் என் பலம்.
இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.