ராணிப்பேட்டை:
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தை சேர்ந்தவர் ஜெகத்குமார். தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதியின் மகள் ஜனனி (வயது 15) மற்றும் ஒரு மகன் உள்ளார்.
ஜெகத்குமார், பிரியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனையடுத்து ஜெகத்குமார் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள புலிவலம் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்.
பிரியா தனது மகள் மகனுடன் திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி. கண்டிகையில் வசித்து வந்தார். அங்குள்ள தனியார் பள்ளியில் ஜனனி 10-ம் வகுப்பு முடித்துவிட்டு பிளஸ்-1 செல்ல தயாராக இருந்தார்.
விடுமுறை என்பதால் ஜனனி புலிவலம் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். அவருடைய உறவினர்கள் லக்சயா, சரண்யா ஆகியோரும் சென்னையில் இருந்து விடுமுறைக்காக வந்திருந்தனர்.
நேற்று காலை ஜெகத்குமார் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ஜனனி லக்சயா ஆகியோர் இருந்தனர். அப்போது யாருக்கும் தெரியாமல் கே.ஜி கண்டிகையை சேர்ந்த சுப்பிரமணி (21)என்பவர் திடீரென அங்கு வந்தார். அவர் வீட்டுக்குள் சென்று கதவை உட்புறமாக பூட்டினார்.
இதனை லக்சயா தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த வாலிபர் லக்சயாவை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அவரை வீட்டுக்கு வெளியே தள்ளினார். வீட்டுக்குள் இருந்த ஜனனியை கத்தியால் வெட்டி சாய்த்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜனனி துடிதுடித்து இறந்தார்.
வீட்டுக்கு வெளியே கத்தி வெட்டு காயங்களுடன் லக்சயா அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் லக்சயாவை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து ஜெகத்குமார் வீட்டு முன்பாக திரண்ட மக்கள் இரும்பு கம்பியால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஜனனி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அங்கு பதுங்கி இருந்த வாலிபர் சுப்பிரமணியை சரமாரியாக அடித்தனர்
கொண்ட பாளையம் போலீசார் வாலிபர் சுப்பிரமணியை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுப்பிரமணி மற்றும் கத்தி வெட்டுப்பட்ட லக்சயா ஆகியோர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று சுயநினைவு இல்லாமல் இருந்த சுப்பிரமணிக்கு நினைவு திரும்பியது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .
மேலும் வீட்டுக்குள் என்ன நடந்தது என்பது குறித்து லக்சயாவிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட மாணவி படித்து வரும் பள்ளி அருகிலேயே வாலிபர் சுப்பிரமணியின் வீடு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.