சென்னை:
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80. தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். கடந்த 2021-ம் ஆண்டில் மணிப்பூர் ஆளுநராக பதவி வகித்தார்.
இல.கணேசன் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பா.ஜ.க. உள்பட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இல கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில் கூறியுள்ளதாவது:
நாகாலாந்து மாநில ஆளுநரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான இல.கணேசன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சிக்காகவும், தமிழக நலனுக்காகவும் கடுமையாக உழைத்தவர். அனைத்துத் தரப்பு மக்களிடமும் பரவலாக அறியப்பட்டவர். எளிமையான மனிதர். ஆழ்ந்த சிந்தனைவாதியாகத் திகழ்ந்தவர்.
இல.கணேசன் மறைவு தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி! என பதிவிட்டுள்ளார்.