கரூர்:
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசல் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.
உடனடியாக விமானத்தில் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றடைந்தார். மருத்துவமனைக்கு சென்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கரூரில் நடந்திருக்கக்கூடிய இந்த கொடுரமான விபத்தை பற்றி விவரிக்க முடியாத அந்த அளவிற்கு சோகமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதை பற்றி விவரமாக சொல்வதற்கு மனது இடம் கொடுக்க வில்லை.
கனத்த இதயத்தோடு உங்கள் முன் நிற்கிறேன்.
கரூரில் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பல பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்ற செய்தி எனக்கு கிடைத்தது. செய்தி கிடைத்த உடனே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டறிந்தேன்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டதை எதிர்பார்க்கவில்லை. இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.
ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இத்தனை பேரை இழந்த துயரமான சம்பவம் இது வரை நடக்காதது. இனிமேல் நடக்கக் கூடாதது.
இறந்துபோன உயிர்களுக்கு எல்லாம் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் குடும்பத்திற்கு என்ன ஆறுவது என்பது தெரியாமல் திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறேன்.
அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. விசாரணை ஆணையம் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.